Released rank list for engineering courses: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை: Released rank list for engineering courses: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள 434 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை மாணவர்கள் விண்ணபிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 1.69 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

கலந்தாய்வு:
அதன்படி, வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 25ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்துள்ள மாணவர்கள் http://www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, 2022-23ம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 36 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இதில்1 லட்சத்து 69 ஆயிரத்து 80 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டை விட 24 ஆயிரத்து 35 பேர் கூடுதலாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.

மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 80 பேரில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 22 ஆயிரத்து 587 மாணவர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள். இதில் 9,981 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற தகுதியானவர்கள். விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,258 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 970 பேர், மாற்றுத்திறனாளிகள் 203 பேர் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் சேர்த்து 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும், தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு 2 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 175 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார்.

இந்த தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19ம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம். மேலும் 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.