IIT Madras Alumni help: சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை: IIT Madras Alumni help JEE aspirants to make an informed choice and answer queries on the Institute. சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ஜேஇஇ விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐத் தங்கள் முதன்மை விருப்பமாகத் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களை விளக்கினர்.

‘AskIIM’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் – askIITM.com – என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். இதில் ஐஐடி மெட்ராஸ் தொடர்பான கேள்விகளை மாணவர்கள் கேட்கலாம். அத்துடன் – @askiitm – என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களின் தற்போதைய வாழ்க்கைமுறை மற்றும் முன்னாள் மாணவர்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலைசிறந்த பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளைக் கேட்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடினார்.

ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11ம் தேதி அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கையை 12ம் தேதி தொடங்கத் திட்டமிட்டு உள்ள உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 2000 முதல் 2009ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஐஐடி-யில் நுழையும் மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்துவந்த, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி இந்த முன்முயற்சி குறித்துப் பேசுகையில்,”பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத் துறையைத் தீர்மானிக்கும் அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த முயற்சியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை அணுகி, அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் உதவ விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இதேபோன்ற நிகழ்ச்சிகளை 3 செப்டம்பர் 2022 அன்று ஐதராபாத்திலும், 4 செப்டம்பர் 2022 அன்று விஜயவாடாவிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், “ஐஐடி மெட்ராஸ்-ல் ஒரு நாள்” என்ற தலைப்பில் செப்டம்பர் 17ம் தேதி மெய்நிகர்ப் பயணம் ஒன்றை நடத்திக் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.