12th Convocation of Ambedkar Law University Chennai: சென்னையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா

சென்னை: The 12th Convocation of Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai was held today. சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக ஆளுநரும், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர். என். ரவி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தாத்பரியத்தின் அடிப்படையில், சட்டக்கல்வி உருவாக்கப்பட்டதாக கூறினார். உலகமயமாக்கல் என்பது தற்போது மக்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர், கல்வி நிறுவனங்கள், மாணவர்களை அறிவு ஜீவிகளாக உருவாக்குவதுடன், நீதி மற்றும் தர்மசாஸ்திரங்களை கற்றறிந்தவர்களாகவும் உருவாக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை முன்னிறுத்தியே பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதன்படி, சமுதாயத்தின் தேவையை அறிந்து சேவையாற்றக்கூடிய தனிமனித வளமிக்கவர்களாக இளைஞர்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களையும், பன்முகத்தன்மை கொண்ட மாணவர்களை உருவாக்கும், பன்முக நிறுவனங்களாக மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் நீதி கிடைக்க செய்வதில், உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என குறிப்பிட்ட கிரண் ரிஜிஜூ, சட்டம் மற்றும் அதன் செயல்முறைகளை பிராந்திய மொழிகளில் உருவாக்கும் நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார். இதற்காக மத்திய அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சட்ட ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு பொதுவான சொற்களஞ்சியத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்கவும், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான வார்த்தைகளை டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், உள்ளூர் மொழியில் வெளியிடப்பட உள்ளது.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தர்மத்தை பாதுகாப்பதுடன், ஜனநாயகத்தை நிலைநாட்ட துணை நிற்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் நமக்கு போதிப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகக் கூடாது என்பதற்காக, அனைவருக்கும் இலவச சட்ட உதவி வழங்க ஏதுவாக கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியாய பந்து சேவையை மத்திய அரசு தொடங்கியது. தற்போது, 14 உயர்நீதிமன்றங்களில் நியாயபந்து சேவைகளை வழங்க தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கிரண் ரிஜிஜூ கூறினார்.

அனைத்து நீதிமன்றங்களிலும் 2.32 கோடி வழக்குகள் மெய்நிகர் விசாரணை மூலமாக விசாரிக்கப்பட்டதாகவும், உச்சநீதிமன்றத்தில் மட்டும், இதுவரை 3 லட்சம் வழக்குகள் மெய்நிகர் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, 2047ம் ஆண்டுக்குள் இந்தியா, உலகின் வழிகாட்டியாக திகழ்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் முயற்சியில் இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்தோஷ் குமார், பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.