Typewriting Exam : தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தேர்வால் விழிப்புணர்வு அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தட்டச்சர் பணிக்கு அதிகம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவதாலும் டைப்ரைட்டிங் கற்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள டைப்ரைட்டிங் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் தொழில்நுட்ப தேர்வுத்துறையால் (Technical Examination Department) பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

கரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் (Typewriting) தேர்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் சீராக செயல்படாததால் பயிற்சி பெறுபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது கரோனா குறைந்து விட்டதால் இந்த தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தட்டச்சர் பணிக்கு அதிகம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவதாலும் டைப்ரைட்டிங் கற்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

வருகிற 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இத்தேர்விற்கு 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக இவர்கள் தனியார் தட்டச்சு நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். ஒரு சிலர் ஒரே நேரத்தில் தமிழ், பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் தட்டச்சு தேர்வை எழுத (Write English typing test) விண்ணப்பித்து அதற்கான பயிற்சி பெறுகின்றனர். சிறப்பு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை சந்திக்க உள்ளதாக தட்டச்சு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் ஊதியம் அதிகம் இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணி புரிய இளைஞர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசின் எந்த துறையிலாவது.குறைந்த ஊதியத்திலும் பணி செய்ய தயாராக உள்ளனர். இதன் காரணமாக அரசு துறைகளில் சேவை (Service in Government Departments)செய்வதற்கான தேர்வுகளில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக டைப்ரைட்டிங் தேர்வுக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.