Villupuram Murder: கடன் கொடுத்தவரையே தீர்த்துக்கட்டிய மகன்; உடந்தையான தாய் கைது

கொலை செய்யப்பட்ட இந்திராணி.

விழுப்புரம்: The mother of the murderer who killed an old woman and buried her inside the house near Villupuram was arrested. விழுப்புரம் அருகே மூதாட்டி கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த கொலையாளியின் தாய் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது 72). இவர் கடந்த 16ம் தேதி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அக்கம் பக்கத்தினர் சென்னையில் தங்கி இருக்கும் இந்திராணியின் மகன் பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த பன்னீர் செல்வம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவசங்கர் (26) என்பவர் இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடனாக கடந்த ஆண்டு வாங்கியுள்ளார். 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த இந்திராணியிடம் வந்த சிவசங்கர், எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்திராணி சிவசங்கர் வீட்டிற்கு சென்றதாக போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிவசங்கர் வீட்டிற்கு போலீசார் சென்ற போது, அங்கு அவர் இல்லை. அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, புதியதாக கட்டி வரும் வீட்டில் இந்திராணி கொன்று புதைக்கப்பட்டிருந்தார். தலையில் பலத்த காயங்களுடன், காது அறுக்கப்பட்ட நிலையில் இருந்த இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து மனைவி மற்றும் குழந்தையுடன் தலைமறை வாகியுள்ள சிவசங்கரை தேடிவந்தனர். மேலும், சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (வயது 45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது வாக்குமூலத்தில் அவர் கூறுகையில் எனது மகன் வாங்கிய கடனை திரும்ப தருமாறு இந்திராணி எங்களை கேட்டுக் கொண்டே இருந்தார். எனது மகன் சிவசங்கர் திருமணமாகி ஒரு கைக்குழந்தையுடன் வெளியூரில் தச்சு வேலை செய்து வந்தான். இதனை அவனிடம் தெரிவித்தேன். சில தினங்களுக்கு குடும்பத்துடன் சிவசங்கர் கிராமத்திற்கு வந்தான். எனக்கே கடன் அதிகமாக உள்ளது. பணம் அதிகமாக தேவைப்படுகிறது என்று என்னிடம் கூறினான்.

சம்பவத்தன்று நானும் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது மகன் இந்திராணியிடம் பணத்தை திருப்பி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். இரு தினங்களில் திரும்ப வருவதாகவும், அப்போது பிணத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்து விடலாம் என்று என்னிடம் போனில் கூறிவிட்டு சென்றான். உடனடியாக நான் வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூதாட்டியின் கொலைக்கு மகனுக்கு உடந்தையாகவும், கொலையை மறைத்ததாகவும், குப்புவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சிவசங்கரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.