Theft of Rs 7 lakh in Hosur: ஓசூரில் தனியார் நிறுவன ஜன்னலை உடைத்து ரூ.7 லட்சம் ‘அபேஸ்’

ஓசூர்: Theft of Rs 7 lakh by breaking the window of a private company in Hosur. ஓசூரில் தனியார் நிறுவன ஜன்னலை உடைத்து ரூ.7 லட்சம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அந்திவாடியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பங்குதாரராக செயல்படும் இன்ஸ்டாகார்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.

பிளிப்கார்டில் ஆர்டர் செய்யும் பொருட்கள் இங்கு வருகிறது. இங்கிருந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, ஊழியர்கள் மூலம் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

மேலும் 2 பெண்கள் உள்பட 27 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் மேலாளர் ராஜேஷ் நேற்று காலை வழக்கம் போல நிறுவனத்துக்கு வந்தார். அப்போது நிறுவனத்தின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இரும்பு பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 73 திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேலாளர் ராஜேஷ் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், கடந்த 9, 10, 11ம் தேதிகளில் வசூல் செய்யப்பட்ட பணம் 6 லட்சத்து 91 ஆயிரத்து 73 ரூபாயை சுவருடன் சேர்த்து பொருத்தப்பட்டிருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவன ஜன்னல் கம்பிகளை எலக்ட்ரிக் மெஷின் மூலமாக மர்ம நபர்கள் துண்டித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் இரும்பு பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் உள்புறமாக 5 கண்காணிப்பு கேமராக்களும், வெளிப்புறமாக 3 கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. இவற்றின் காட்சிகள் பதிவாகும் கணினி ஹார்டுடிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த நிறுவனத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்பதும் தெரிந்தது. இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் மத்திகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.