Fake preacher arrested: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போலி சாமியார் கைது

திருவண்ணாமலை: Fake preacher arrested on Thiruvannamalai Grivalam road. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்ததாக போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன், தாலுகா காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காவலர்களுடன் கிரிவலப் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை நடத்தியதில் சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாது போர்வையில் பிறருக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தததாக போலீசார் தெரிவித்தனர்.