தென்காசி: Police arrested people who tried to circulate fake currency of Rs 3 lakh in Sankaran temple.: சங்கரன்கோவிலில் ரூ.3 லட்சம் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் நகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின்பேரில் சங்கரன்கோவில் நகர் போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சென்னை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வந்த இரண்டு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது இரண்டு சக்கர வாகனத்தின் உள்ளே கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்களிடமும் நடத்திய விசாரணையில் வந்தவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பதும், மற்றொருவர் சங்கரன்கோவிலை பூர்வீகமாக கொண்டு தற்போது சென்னையில் வசித்து வரும் காஜா நஸ்முதீன் என்பதும் தெரியவந்தது.
மேலும் காஜா நஸ்முதின் ஏற்கனவே சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது பிணையில் வெளியே வந்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து மேலும் சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் இருவரும் கொண்டு வந்தது கள்ள நோட்டு என்பதும் அந்த கள்ள நோட்டுகளை சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் புழக்கத்தில் விட வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் 2 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற சென்னையை சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



