Nellai College student Suicide: நெல்லையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: Nellai College student Suicide: நெல்லை களக்காடு அருகே கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை (Kallakurichi Student Suicide) செய்துகொண்டது சந்தேக மரணம் என அவர்களது உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் கலவரமாக (Kallakurichi Riots) வெடித்தது. இந்த கலவரத்தில் தனியார் பள்ளி வளாகத்திலிருந்த பள்ளிப் பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதனையடுத்து மாணவியின் வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி நிர்வாகி, செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் திருவள்ளூர், விழுப்புரம், சிவகாசி என தொடர்ந்து மாணவிகள் தற்கொலை சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய பரபரப்பு அடங்குவதற்குள் நெல்லை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பாப்பா. நெல்லை அருகே ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை அவரது தந்தை முத்துக்குமார் 2 தவணைகளாக செலுத்தினார். அவர் கூலித் தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இருப்பினும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி மன வேதனை அடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை திறந்து உள்ளே சென்றபோது, மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவம் இடம் விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.