Bomb threat to private school again: திருவள்ளூர் அருகே தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; விடிய விடிய சோதனை

திருவள்ளூர்: Bomb threat to private school again. பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அங்கு நடைபெற்ற சோதனையில் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.

இந்தநிலையில் நேற்றிரவு மீண்டும் 2வது முறையாக பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் நள்ளிரவு முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இந்த பள்ளிக்கு 2வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாகவும், பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்த வாட்சப் எண் வெளிநாட்டில் இருந்து வந்தது போல் இருப்பதால் மிரட்டல் விடுத்தது யார் என கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

லாரி-டூவீலர் மோதி விபத்து; தாய், மகன் பலி
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கவுதம் (வயது.35). இவரின் உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்க்க டூவீலரில் நேற்று இரவு 9 மணியளவில், இவரது மனைவி கிருத்திகா (வயது.30), இவர்களின் குழந்தை பிரவித் (வயது.3) ஆகியோருடன் கவுதம் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பவானி லட்சுமி நகர் தாண்டி, சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்தின் மீது வந்த போது, இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று நிலைதடுமாறி இவர்களின் வாகனம் மீது மோதியது. இதில் கவுதம் மனைவி, மகன் சம்பவ இடத்தில் பலியாகினர். அவ்வழியே வந்த சிலர் லாரியை பின் தொடர்ந்து செல்ல, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையான எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரி ஓட்டுனர் தலைமறைவாகி விட்டார். ஆம்புலன்ஸ் மூலம் இரு உடல்களையும், கவுதமையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.