Woman Suicide Attempt: காஞ்சிபுரத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம்: Attempt to set woman on fire in Kanchipuram. மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்கக் கோரி மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த நிலையில் மனநலம் பதிக்கப்பட்ட 23 வயது மகனை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பனையூர் விடுதியில் சேர்த்து வைத்திருந்த நிலையில் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி விடுதி நிர்வாகத்தினர் வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட லட்சுமி, மகனை மீண்டும் காஞ்சிபுரம் விடுதியில் சேர்க்க முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து மனு அளிக்க லட்சுமி முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக லட்சுமி இன்று காலை வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி தாயையும் மகனையும் மீட்டனர்.

பின்னர் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தாயையும் மகனையும் அழைத்து வந்து மனுவினை வழங்க ஏற்பாடு செய்தனர்.

தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி அங்கு வந்தார். பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு உடனடியாக விடுதி நிர்வாகத்திடம் பேசி மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

மேலும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் தான் முறையிடவேண்டும். அதற்கு பதிலாக இதுபோன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்க கூடாது என அறிவுரை கூறி, மீண்டும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறி அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொது மக்களை காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. சரியான நேரத்தில் பெண் காவலர் எடுத்த நடவடிக்கையால் இந்த தீ குளிப்பு முயற்சி சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.