Appointing executive officers : ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலர்களை நியமிக்கும் விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை : Appointing executive officers in the temples : இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ள நபர்களில் ஒருவர், மூன்று வாரங்களுக்குள் கால தாமதமின்றி விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலர்களை நியமிக்கும் போது அதற்கான விதிகளை முறையாக பின்பற்ற மதுரை ஆதீனம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் (Thanjavur, Tiruvarur, Kanchanur, Tiruppurampiyam) ஆகிய இடங்களில் நான்கு கோவில்கள் உள்ளன. அதோடு மதுரை, தஞ்சை, நாகை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும் உள்ளன. விதிப்படி ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலரை நியமிக்க மூன்று நபர்களை தேர்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை ஆதினம் தேர்வு செய்வார்.

ஆனால் அத்தகைய நடைமுறையை பின்பற்றாமல் கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோவிலில் (Kanchanur Arulmiku Agneesvaraswamy temple) செயல் அலுவலரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி கோவில் செயல் அலுவலரை நியமித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலர்களை நியமிக்கும் போது அதற்கான விதிகளை முறையாக பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் (Krishnakumar as Executive Officer) நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் விதிப்படி மூன்று நபர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்திற்கு பரிந்துரை செய்யலாம் எனவும் குறிப்பிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி நிர்மல் குமார் (Justice Nirmal Kumar) முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், விதிப்படி மூன்று நபர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ள நபர்களில் ஒருவர், மூன்று வாரங்களுக்குள் கால தாமதமின்றி விரைவில் தேர்வு செய்யப்படுவார் என உறுதியளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.