Vijay Sethupathi case dismissed: நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து

சென்னை: The High Court has quashed the case filed against actor Vijay Sethupath: பெங்களூருவில் மகா காந்தி என்பவரை தாக்கியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல பெங்களூர் விமான நிலையம் சென்றார். நடிகர் விஜய் சேதுபதியும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மகா காந்தி சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், தனது மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் (SAIDAPET 9TH METROPOLITAN LAW COURT) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார்.

விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீதான பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.