Rajinikanth Birthday: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: Chief Minister M. K. Stalin wishes actor Rajinikanth on his birthday. நடிகர் ரஜினிகாந் தனது 73வது பிறந்த நாள் இன்று கொண்டாடுகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் 134ம் நம்பர் பஸ்ஸில் பணியாற்றியபோதே அவரின் ஸ்டைல் பெங்களூரு முழுவதும் பிரபலம். கலையுலகில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தன்னிகரில்லா இடம் பிடித்து, சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் ரசிக்கும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சுமார் 47 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்த நிலையில் திரையரங்குளில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இனிய நண்பர், தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.

வைரமுத்து தனது வாழ்த்துச் செய்தியில்,
பாசமுள்ள மனிதனப்பா – நீ
மீசவச்ச குழந்தையப்பா
நன்றியுள்ள ஆளப்பா
நல்லதம்பி நீயப்பா
தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாட்டு மண்ணப்பா
தங்கமனம் வாழ்கவென்று
தமிழ்சொல்வேன் நானப்பா
என கவிதையாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இறைவன் பூரண ஆரோக்கியமும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையச் செய்ய என் வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.