Actor Rajinikanth talked politics with the governor: ஆளுநரிடம் அரசியல் பேசினேன்; வெளியில் கூற முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: Actor Rajinikanth talked politics with the governor: டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். கிண்டி, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதனைத்தொடந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஆளுநருடன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. காஷ்மீரில் பிறந்து வட மாநிலங்களிலேயே இருந்த ஆளுநர், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள ஆன்மிக உணர்வு அவரை இழுத்துள்ளது.

தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன் என ஆளுநர் கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இதனைத்தொடர்ந்து பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.

சமீபத்தில் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை வந்த அவர் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை என ரஜினி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அண்ணாத்த படம் வெளியானது. அந்தப் படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் கிடைத்தன.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். ஆனால் அவர் விஜயின் பீஸ்ட் படத்தில் பிஸியாக இருந்தார். அந்தப் படம் வெளியான பிறகு ஜெயிலர் படத்தின் கதை விவாத பணிகளை நெல்சன் தொடங்கினார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆளுநர் சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு வரும் 15 அல்லது 22-ம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.