North Korea: வடகொரியாவில் 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா

North korea: உலகை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு வடகொரியாவும் விதிவிலக்கு இல்லை. அங்கும் இந்த தொற்று பரவலை கடந்த 12-ந் தேதி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் உறுதி செய்து நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார்.

ஆனாலும் தினந்தோறும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்றின் அறிகுறிகளுக்கு ஆளாவது தொடர்கிறது. தடுப்பூசி நுழையாத இந்த தேசத்தின் தொற்று பரவல் உலகளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மேலும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தொற்று பரவல் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து 5-வது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தைத்தாண்டி உள்ளது. ஆனால் அந்த நாடு உண்மையான பாதிப்பினை மறைத்து வருகிறது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பலி எண்ணிக்கையும் குறைத்து கூறப்படுவதாக நம்பப்படுகிறது.இதுவரை அங்கு 24 லட்சம் பேர் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகி உள்ளனர். 66 பேர் இறந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகளை பிறப்பித்து, அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். நகரங்களுக்கு இடையே கடுமையான பயண கட்டுப்பாடுகளை தலைவர் கிம் ஜாங் அன் பிறப்பித்துள்ளார்.

தொற்றின் மையமாக கருதப்படுகிற தலைநகர் பியாங்யாங்கில் மருந்து வினியோகத்தில் பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் பேசிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தொற்று பரவலை கட்டுக்குள் வரத்தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதே போக்கு நீடிக்க கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார். வைரஸ் பரவல் நிலைமைக்கேற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட தேவையான திட்டங்களை தீட்டுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Cannes 2022: கேன்ஸ் விழாவில் நடனம் ஆடிய தீபிகா படுகோனே