HP Company : ஹெச்பி நிறுவனம் 3 ஆண்டுகளில் 6000 ஊழியர்களை பணி நீக்கம்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி (HP Company) என புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹெவ்லெட் பேக்கார்ட் எண்டர்பிரைஸ், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

புதுடெல்லி: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை குறைப்பை அறிவித்ததை அடுத்து, அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ஹெச்பி என அழைக்கப்படும் அமெரிக்கன் ஹெவ்லெட் பேக்கார்ட் எண்டர்பிரைஸ் (American Hewlett Packard Enterprise), அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மோசமான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, ஹெச்பி (HP) வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் ஸ்திரமின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் அதன் விற்பனை அளவு 11 சதவீதம் குறைந்துள்ளதாக ஹெச்பி தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகளவில் 4,000 முதல் 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்குறைப்பு செயல்முறை 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ஹெச்பி நிறுவனத்தில் சுமார் 51,000 பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திற்காக நாம் தயாராக வேண்டும். அதற்கேற்ப ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நிறுவனத்தின் மதிப்பை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், செலவைக் குறைக்க வேண்டும். மேலும், நமது தொழில்துறையின் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் பகுதிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஹெச்பி தலைவர் மற்றும் மூத்த செயல் அதிகாரி என்ரிக் லோரெஸ் (Enrique Llores, Chairman and Chief Executive Officer of HP) தெரிவித்துள்ளார்.

ஹெச்பியும் வேலைக் குறைப்புகளை அறிவிப்பதால், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்கங்கள் துரிதப்படுத்தப்படும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் விரைவில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக செவ்வாய்கிழமை தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நிதிச்சுமையை சமாளிக்க நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் மேலாளர்களுக்கு குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 6 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய (To lay off 6 percent of the company’s total workforce) ஆல்பாபெட் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், அமேசான் (Microsoft, Meta, Twitter, Amazon) போன்ற தொழில்நுட்பத் துறையில் உள்ள ராட்சத நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு செயல் முறையை அறிவித்தன. மெட்டா நிறுவனம் பதினொன்றாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மைக்ரோசாப்ட் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ட்விட்டர் 3,500 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியது. அண்மையில், அமேசான் நிறுவனமும் 2023 இல் பணி நீக்க செயல் முறையை தொடரும் என்று கூறியது.