ஒடிசாவில் இன்று அதீத கன மழை பெய்யும்

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள எல்லையில் பாலசோருக்கு தெற்கே இன்று காலையில் கரை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. 


புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். 


பலத்த காற்றின் காரணமாக சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். 
புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, துர்காபூர், ஒடிசாவின் புவனேஸ்வர், ஜார்சுகுடா, ரூர்கேலா விமான நிலையங்கள் மூடப்பட்டன. வர்த்தக விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவுக்கு இயக்கப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
யாஸ் புயல் பாலசோருக்கு தெற்கே ஒடிசா எல்லையில் கரை கடக்கிறது. இதன் காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் கடலோர ஒடிசாவில் இன்று அதீத கன மழை பெய்யும். மேற்கு வங்காளத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஜார்க்கண்ட், பீகார், சிக்கிமில் தொலைதூர இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். 
இந்த புயல் நாளை காலை ஜார்க்கண்டை அடையும். புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது என்று  வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.