விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா..

ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது. தனிமையில் இருக்கும் போதே இரண்டாவது முறையாக கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

கடந்த முறையாவது கடும் உடல்வலி, காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தன. இந்த முறை ஒரு கொரோனா அறிகுறிகளும் இல்லாமலேயே பாசிட்டிவ் ஆகியுள்ளது.

டெல்லியில் தனிமையில் இருக்கும் சஹா அங்கேயே இருக்கப் போவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் இன்னொரு டெஸ்ட் எடுத்து அதில் நெகெட்டிவ் என்று வந்தால் அவரை தனிமையிலிருந்து விடுவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதன் முதலில் கொரோனா தொற்றிய போது கடுமையாக பயந்து போனதாகக் கூறினார் சஹா.

“நிச்சயம் முதல் முறை வந்த போது நான் பயந்துதான் போனேன், ஒரு வைரஸ் பூமியையே நிச்சலனமாக்கியுள்ளது. அந்த வைரஸ் என்னைத் தொற்றும்போது பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?

குடும்பத்தினர் அனைவரும் கவலைப்பட்டனர், நான் வீடியோ வெளியிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். இப்போது பயப்பட தேவையில்லை என்று தோன்றுகிறது. என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

மே மாதம் முதல் நாள் நான் பயிற்சி முடித்து விட்டு மிகவும் களைப்பாக இருந்தது. சளி பிடித்திருந்தது. லேசான இருமல் இருந்தது. அணி மருத்துவரிடம் அப்போதே சொன்னேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, அதனால் தனியாக இருந்தேன். அதே நாளில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தனர்.” என்று முதலில் கொரோனா தொற்றும்போது கூறியிருந்தார்.