ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொது மறையாக விளங்குகிறது.
அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது. ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் கையால் எழுதப்படும் கடிதங்கள் ரொம்ப குறைவு என்பது வேதனைக்குரியது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார். அதனால் இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
மொத்தத்தில் கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் என்பதை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டும். அதனால் நமக்கு பிடித்தவர்களுக்கு இந்த தினத்தையொட்டியாவது ஒரேயொரு கடிதம் எழுதத் துவங்குவோமே!



