உலக மனிதநேய தினம்

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்… பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட… என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள்.

அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே ‘உலக மனித நேய தினம்’.

முதலாவது உலக மனிதநேய தினம் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மனித நேயச் சிந்தனை தமிழனுக்குப் புதிதல்ல. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எல்லா ஊர்களும் நமதே! எல்லோரும் நமது உறவினர்களே! என்று சங்ககாலப் புலவன் கணியன் பூங்குன்றனின் கூற்று உயர்ந்து ஓங்கி ஒலிக்கிறது.

பேரறிஞர் அண்ணா அமெரிக்க பயணத்தை முடித்தபிறகு ரோமில் போப் ஆண்டவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போப் ஆண்டவரைச் சந்திக்க வருகிறவர்களுக்கு பரிசு ஒன்று கொடுக்கப்படுவதுண்டாம். என்ன பரிசு வேண்டும் என்று உதவியாளர் கேட்டபோது, ஒரு வித்தியாசமான பரிசை அண்ணா கேட்டார். இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றபோது, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கோவா விடுதலை பெறவில்லை. காரணம் அந்தப்பகுதி போர்ச்சுக்கீசியர் வசமிருந்தது. தாமதமாகத்தான் விடுதலை கிடைத்தது. ஆனால் கோவாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ராணடே என்பவர் கைது செய்யப்பட்டு போர்ச்சுகல் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மத அடிப்படையில் அந்த நாடு போப் ஆண்டவரின் ஆளுகைக்கு உட்பட்டது. அந்த விடுதலைவீரர் ராணடேயின் விடுதலையைத்தான் பரிசாகக் கேட்டார் அண்ணா. இந்தத் தகவல் போப் ஆண்டவருக்குட்பட்டது. விசாரிப்பு நடந்தது.

“அவரை உங்களுக்குத் தெரியுமா, “தெரியாது” “பிறகு ஏன் அவருக்கு விடுதலை கேட்கிறீர்கள்?” “ஒரு விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவரை சிறையில் வைத்திருப்பதைவிட மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாமே” “அது என்னால் இயலும்.

ஆனால் உடனடியாக முடியாது உங்களின் மனித நேயத்துக்கு மதிப்பளித்து நிச்சயம் விடுதலைக்கு ஏற்பாடு செய்வேன்” போப் ஆண்டவர் உறுதியளித்தபிறகு தான் அண்ணா நிம்மதியடைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ராணடே விடுதலை செய்யப்பட்டார். தனது விடுதலைக்கு அண்ணாவின் முயற்சிதான் காரணம் என்று அறிந்ததும் உருகிப்போனாராம்.