வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல: உத்தவ் தாக்கரே

மஹா.,வில் கோயில் திறப்பு குறித்தும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்தும் மஹா., கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இதற்கு, ‛வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல’ என உத்தவ் பதிலளித்துள்ளார்.

கரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மஹாராஷ்டிராவில் கோயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்து கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சிவசனோ கட்சியின் வருடாந்திர தசரா பேரணியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: நாங்கள் இன்னும் கோயில்களை திறக்கவில்லை என்பதால் இந்துத்துவா குறித்து எங்களிடம் கேட்கின்றனர். மஹாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு, கோவாவில் தடை செய்யவில்லை. இதுவா உங்கள் இந்துத்துவா?
வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே எங்களின் இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‛கோயில்களை திறந்து பூஜை செய்வது மட்டும் இந்துத்துவா அல்ல’ என அழகாக விளக்கியுள்ளார். எனவே, அங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (கோஷ்யாரி) அணியும் கறுப்பு தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் மோகன் பகவத் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.