மமதா பானர்ஜியின் கோட்டையை 2021இல் தகர்க்குமா பாஜக

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அம்மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அடுத்து ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது புதிராகவே இருந்தாலும், தற்போதைய போக்கின்படி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

எதிர்வரும் தேர்தலில் எப்பாடுபட்டாவது மேற்கு வங்கத்தில் வெல்ல வேண்டும் என பாஜக விரும்புகிறது. அதற்கான முயற்சிகளை அக்கட்சி ஏற்கனவே தொடங்கியுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத்தின் வருகை என, பாஜக மற்றும் அதனுடன் சேர்ந்த அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக வங்காள தேர்தல் களத்தில் குதித்துள்ளன.

இது தவிர, சுவேந்து அதிகாரி மற்றும் வேறு சில தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமையுமா அல்லது மூன்றாவது முறையாக திரிணமூல் கட்சி ஆட்சியை தக்க வைக்கப்போகிறதா என்பது பல விஷயங்களைப் பொறுத்தே தெரிய வரும்.

“மமதா பானர்ஜி ஒரு போராளி குணம் கொண்டவராகவே பொதுவாகப் பார்க்கப்படுகிறார். அவரை விரும்புவோரின் பார்வையில் மட்டுமல்லாமல் அவரை விரும்பாதவர்களின் பார்வையில் கூட அவர் ஒரு போராளி.” என்று அருந்ததி கூறுகிறார்.