அனைவருக்கும் வீடு திட்டத்தை மோடி இன்று தொடங்கிவைக்கிறார்!!!

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 2023க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் பிரதமர் அறிவிக்க உள்ளார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார்.

பிரதமர் இன்று அடிக்கல் நாட்டும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1, 152 ஆகும். இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம் ஆகும். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம் ஆகும். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும்.

விரைவான, பாதுகாப்பான, உறுதிவாய்ந்த கட்டுமான தொழில்நுட்பத்தில் பிரி-காட்ஸ், முன்பு உருவாக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் உத்திரங்களை கொண்டு குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.