தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளிகாற்றுடன் கனமழை பெய்தது. கானாவிலக்கு, வைகைபுதூர், குன்னூர், ஜம்புலிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செல்லம்பட்டி, கருமாத்தூர், வாலாந்தூர், தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், சேடபட்டி மற்றும் எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.இதனிடையே, இன்றும், தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.