3-வது அலையைத் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு- தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா நினைவுத் தோட்டம், திறந்தவெளி வகுப்பறை தொடக்க விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் கொரோனா நினைவுத் தோட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் திறந்தவெளி வகுப்பறையைத் தொடங்கி வைத்து மாணவர்களோடு கலந்துரையாடினார்.

அதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-”அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மாணவர்கள் தடுப்பூசிக்குப் பிரச்சாரகர்களாக மாற வேண்டும். எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும். நோயற்ற புதுவையை உருவாக்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிக்காது.

கொரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு.