தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என புதுச்சேரி அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப் பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி செயல்பட முடியாது என கருத்து தெரிவித்து, இதுதொடர்பாக புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெரனல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘ வார்டுகள் ஒதுக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முறையாக வார்டுகளை மறுவரையறை செய்து, வார்டு ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் வாய்ப்பு இல்லை. இதனால் அக்.21 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் முடிவெடுக்கவுள்ளதால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும்” எனக் கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும். இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புதுச்சேரி அரசு இன்று (அக்.5) மாலைக்குள் தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு