Urban local election: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

Tamil Nadu Urban Local Body
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, (Urban local election)நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 பதவிகளுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 பதவிகளுக்கும், 490 பேரூராட்சிகளில் 7,621 பதவிகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14 ஆயிரத்து 701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23 ஆயிரத்து 354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி உள்ளதா? என பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இறுதிகட்ட பட்டியல்

அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதைப்போல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.க., புதியநீதி கட்சி, சமூக சமத்துவ படை உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேலும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணி வரை கால அவகாசம் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அந்தவகையில் ஒரு கட்சியின் முக்கிய வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அக்கட்சியின் மாற்று வேட்பாளர்களின் வேட்புமனு தானாக ரத்து செய்யப்படும். இதையடுத்து திரும்ப பெறப்பட்ட வேட்புமனுக்களை தவிர்த்து இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

சின்னம் ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களது சின்னங்களே ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையமே சின்னத்தை ஒதுக்கீடு செய்யும். இந்த நிலையில் இரு வேட்பாளர்கள் ஒரே சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்தால், குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பரபரப்பான பிரசாரத்துக்கு பின்னர் வரும் 19-ந் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் வருகிற 22-ந் தேதி எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்

(urban local body election in Tamil Naadu)