‛தி பேமிலி மேன் 2′ இணையத் தொடரை ஒளிபரப்பக்கூடாது- சீமான்

seeman
பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய் மொழி குறிப்பு

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‛தி பேமிலி மேன் 2′ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப்புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.