அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை..!

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு, அபராதம் செலுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, தடை உத்தரவு பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கொரானா நிவாரண நிதியாக ஏன் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தரப்பில், ஏற்கனவே கடந்த ஆண்டு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.