NOTA: வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன்,விவிபேட் கிடையாது

NOTA
வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன்,விவிபேட் கிடையாது

NOTA: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டாவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 04.02.2022 வரை மொத்தம் 74416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிட்டபோது, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து தற்போது, வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்களை பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ககந்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு சென்னையில் மட்டும் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் நடைபெற இருக்கும் 5,794 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எண்ணும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசி டிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா சின்னம் கிடையாது. வழக்கமாக எம்பி, எம்எல்ஏ தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால், வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வசதி இருக்கும். ஆனால், தற்போது மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் என்பதால், நோட்டா சின்னம் கிடையாது.

அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியும் இத்தேர்தலில் பயன்படுத்தப்படாது. அந்த கருவியும் வாக்குப்பதிவின்போது இருக்காது. எம்பி, எம்எல்ஏ தேர்தலின்போது, வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியதும், முன்பகுதியில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் விவி பேட் கருவியில் வாக்களித்த சின்னம், பெயர் ரோலர் வருவதை பார்க்க முடிந்தது. அது தற்போது இருக்காது என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: School holiday: வரும் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!!