விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர் சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக முனைவர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உணவு, உடற்பயிற்சி என தினமும் புத்துணர்ச்சியோடு வலம் வரும் சைலேந்திர பாபு, இணைய உலகில் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தையே வைத்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த சைலேந்திர பாபு, அரசுப் பள்ளியில் தனது படிப்பை நிறைவு செய்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தின் கப்பல் பிரிவில் பணியில் இருந்துள்ளார். பின்னர், கேரள போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயின்றுள்ளார். அங்கு படிக்கும்போதுதான் மத்திய அரசுப் பணியாளர் தேர்வினை எழுதி ஐ.பி.எஸ் ஆக தேர்வானார்.

புத்தகங்கள் எழுதுவது இவருக்குப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. உனக்குள் ஒரு தலைவன்',சிந்தித்த வேளையில்’, உங்களுக்கான 24 போர் விதிகள்',அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்’, உடலினை உறுதி செய்',சாதிக்க ஆசைப்படு’ உள்பட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.