Etharkkum Thunindhavan Review: எப்படி உள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்?

surya-s-etharkum-thuninthavan-movie-review-in-tamil
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

Etharkkum Thunindhavan Review: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் படம் எதற்கும் துணிந்தவன். 2019ம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் படம் திரையரங்கில் வெளியானது, அதன் பிறகு சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் திரையரங்கில் இப்படங்களை பார்க்க முடியாமல் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இதனை போக்கும் விதமாக இன்று திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர். ஹீரோயின் பிரண்ட் ஆகா படம் முழுவதும் வரும் திவ்யா துரைசாமிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Etharkkum Thunindhavan Review

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டும் வில்லனிடம் இருந்து பெண்களை காப்பாற்ற நினைக்கும் போது, அதில் சூர்யாவின் குடும்பமும் சிக்கி கொள்கிறது, அதில் இருந்து எப்படி மீண்டு தன் குடும்பத்தையும், மற்ற பெண்களையும் காப்பாற்றுகிறார் என்பதே எதற்கும் துணிந்தவன் படத்தின் ஒன் லைன். கடந்த இரண்டு படங்களில் சீரியஸான ரோலில் நடித்த சூர்யாவிற்கு இப்படத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முழுவதும் வித்தியாசமான கதாபாத்திரம். வழக்கம் போல இதிலும் கலக்கி உள்ளார் சூர்யா. ஜெய் பீம் படத்தை போன்று இதிலும் வக்கீல் கதாபாத்திரம் என்றாலும் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதளவில் இல்லை. சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் முக்கிய எமோஷன் காட்சியில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: DMK MP NR Elangovan’s son died : திமுக எம்.பி. மகன் விபத்தில் உயிரிழப்பு

படத்தின் முதல் பாதியில் சூர்யா வீட்டில் நடக்கும் குறும்பு காட்சிகள், சூர்யா – சரண்யா பொன்வண்ணன் இடையே நடக்கும் உரையாடல்கள், பொண்ணை தூக்க போறோம் என்று பெண் வீட்டாரிடமே சொல்லிவிட்டு நடக்கும் காட்சிகள் சிறப்பாக உள்ளன. சூரி, புகழ் போன்றோருக்கு பெரிய ஸ்கிரீன் பிரசன்ஸ் இல்லை என்றாலும் தாங்கள் வரும் காட்சிகளில் லைட்டாக சிரிக்க வைக்கின்றனர். மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் பிரபஸர் போல, சூர்யா தன் குடும்பத்துடன் திட்டம் போடும் சீனில் திரையரங்கமே சிரிப்பலையில் அதிருகிறது. பெண்களை ஏமாற்றி அவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் வில்லனாக வினை, டாக்டர் படத்தில் வரும் வில்லனின் அண்ணன் போலவே இருக்கிறார். தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சையான பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, அதனை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்களிடம் சிக்கி வாழ்க்கையை துளைக்கும் பெண்களுக்கு தைரியம் கொடுக்க நினைத்து இப்படத்தை இயக்கி உள்ள பாண்டிராஜ்க்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இது போன்ற பிரச்சனைகளில் தன் உள்ளே உள்ள கோபத்தை திரையில் கொண்டு வர நினைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பாண்டிராஜ்.

Etharkkum Thunindhavan Review

பெண்களுக்கான காவல்துறையின் காவலன் செயலியை பற்றி சூர்யா எடுத்து கூறும் காட்சி, தன் குடும்பம் பாதிக்கப்பட்ட பின் அவர்களுக்கு சூர்யா தைரியம் கூறும் காட்சி என இன்றைய சமூகத்திற்கு தேவையான விஷயங்களை எடுத்து கூறியுள்ளனர். “புள்ள பெக்குறவன்லாம் அப்பா இல்ல, புள்ளைய சரியா வளக்குறவன் தான் அப்பா”, “பொண்ணுகனா அவமானம் இல்ல, அடையாளம்” போன்ற பாண்டிராஜின் ஆழமான வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை இப்படி யோசித்ததற்காக இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் கொடூரத்தை பட்டும் படாமலும் சொல்லி உள்ளனர். டி இமானின் இசையில் பாடல்கள் தேவை இல்லாத இடத்தில் இடம் பெற்றாலும் பிஜிஎம்-ல் தெறிக்கவிட்டு இருக்கிறார். படத்தின் முதல் பாதி மெதுவாக சென்று கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது, பிறகு இன்டெர்வல் காட்சியில் இருந்து சூடுபிடித்து கிளைமாக்ஸ் வரை ஜெட் வேகத்தில் நகர்கிறது. படம் முழுவதும் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், படம் முடித்து வெளியில் வரும் போது அதனை மறக்கவைக்கிறது. கண்டிப்பாக இளைஞர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்..!

இதையும் படிங்க: iPhone 13 new green colors : ஐபோன் 13 மற்றும் 13 ப்ரோ தற்போது புதிய பச்சை நிறத்தில்