Indian Students: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு இலவச உணவு

sriperumbudur-hotel-owner-gives-free-foods
இந்திய மாணவர்களுக்கு இலவச உணவு

Indian Students: உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ரஷிய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இன்று 6-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகின்றன.

இதனால் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

போர் தீவிரமாக நடந்து வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் பதுங்கி உள்ளனர்.

தமிழக மாணவர்கள் ஏராளமானவர்களும் இங்கு சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதிலும், உணவுக்காகவும் இக்கட்டான நிலையை சந்தித்து வருகின்றனர். வாட்ஸ்அப் வீடியோக்கள் மூலம் அவர்கள் உதவிகேட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே போர் பதட்டம் அதிகமாக உள்ள கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலசங்கர் என்பவர் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்தியர்கள் 1,500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலசங்கர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். போர் ஆரம்பித்ததும் அவர் தனது மனைவி சோனியாவை நகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்.

பின்னர் அவர் மனைவியின் வேண்டுகோளை மீறி போர் நடக்கும் பகுதிக்கு வந்து மீண்டும் தங்கினார். அங்கு அவரது இரண்டு சகோதரர்கள் அப்புகிருஷ்ணன், சுஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவி வருகிறார்.

கடந்த 5 நாட்களில் பாலசங்கர் தனது உணவகம் மூலம் மற்றும் தனது தொண்டு நிறுவனமான மாறன் அறக்கட்டளையுடன் இணைந்து உணவு பொட்டலங்களை வினியோகித்து வருகிறார்.

இது தொடர்பாக பாலசங்கர் கூறியதாவது:-

நாங்கள் உக்ரேனிய தமிழ் சங்கத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறோம். உக்ரைன் எனது 2-வது தாய் நாடு. எனக்கு புதிய வாழ்க்கையை வழங்கியது. இந்த நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.

நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி பதுங்கு குழியில் சிக்கி இருப்பதாக நாங்கள் அறிந்தோம். மளிகை பொருட்கள் தீரும் வரை உணவை சமைத்து வினியோகிக்க முடிவு செய்துள்ளோம்.

மளிகை பொருட்கள் குறைந்து விட்டதாலும் கடைகள் எதுவும் திறக்காததாலும் சமைத்த உணவுக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.

உணவை கொண்டு செல்லும் போது உக்ரேனிய போலீசார், ரஷியா ராணுவத்தினர் பலமுறை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் உணவு பொருட்களை பார்த்த பின்னர் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

முதல் நாள் நான் சந்தித்த சிலருக்கு உணவுகளை வினியோகித்தேன். பின்னர் மாணவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களில் என்னை சேர்த்துள்ளனர். நகரின் புறநகர் பகுதியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Free food for Indian students in Ukraine

இதையும் படிங்க: Microsoft CEO Satya Nadella : மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் மகன் மரணம்