விண்வெளி சுற்றுலாவுக்கு ஆசையா?? இதோ பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பு

வாஷிங்டன்-அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பை அளிக்க உள்ளது.

இது குறித்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் பான்ட்டர் கூறியதாவது:பிரமாண்ட பலுானில் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் இறங்கியுள்ளோம். 6 மீட்டர் பலுானை ஹீலியம் வாயு வாயிலாக ஒரு கால்பந்து மைதானத்தின் விட்டத்திற்கு விரிவுபடுத்தி, விண்ணில் செலுத்துகிறோம். சமீபத்தில் ஆளில்லாமல் அனுப்பிய பலுான் வெற்றிகரமாக, 1 லட்சம் மீட்டர் உயரம் பறந்து, பத்திரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து மனிதர்களை பலுானில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். ஆறு மணி நேர பயணத்திற்கு, ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய் என, நிர்ணயித்துள்ளோம். ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

டிக்கெட் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 300 பேர் பணம் செலுத்தி விட்டனர். அதனால் 2024ம் ஆண்டு வரை சுற்றுலா பயணத்திற்கான பதிவு முடிந்து விட்டது. 2025ம் ஆண்டுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. இந்த பலுானில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறைகள் உள்ளன. விண்ணில் இருந்து பூமியை தெளிவாக பார்த்து ரசிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இணையம் வாயிலாக பூமியில் உள்ள உறவினர்களுடன் நேரடியாக பேசும் வசதியும் உள்ளது. இந்த திட்டம் சுற்றுலா ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.