கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

sewage tank
ழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் பயன்படுத்திவரும் கழிவறை நிறைந்து விட்டதால் அதை அகற்ற கழிவுநீர் வண்டியை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து தனியார் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனம் வந்துள்ளது.

இதில் கூலித் தொழிலாளர்களான ராஜேஷ் (32), ஏழுமலை (35) ஆகியோர் கழிவு நீரை அகற்றி தொட்டியை சுத்தம் செய்ய முயற்சிக்கும்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர், காவல்துறையினருக்கும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் கழிவுநீர் தொட்டியில் தண்ணீர் பாய்ச்சி அடித்து இறந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கி இருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள புறநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரே கட்டிடத்தில் இரண்டு மூன்று குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். எனவே அவர்கள் பயன்படுத்தும் கழிவுநீர் தொட்டிகள் மிக விரைவாக நிரம்பி வருகின்றன. அவற்றை வெளியே அகற்றுவதற்கு தனியார் வாகனங்களை பெருமளவு நம்பியிருக்கிறார்கள்.

ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் அடிக்கடி இது போன்ற விஷ வாயு தாக்கி உயிரிழப்பு சம்பவம் நடைபெறுவது தொடர்கதை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விஷவாயு தாக்கி உயிர் இழந்திருக்கிறார்கள். கழிவறைகள் மற்றும் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாகி உள்ளது இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: TR balu: டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை