Online Exam: ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்- அமைச்சர் பொன்முடி

Online Exam
ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்

Online Exam: கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக வரும் பிப்.1 முதல் பிப்.20ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது கரோனா தொற்று ஒமைக்ரான் என்ற பெயரில் அதிகரித்து வருகின்ற காரணத்தால், நாங்கள் முதலில் அறிவித்திருந்த அறிவிப்புகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில், கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர்கள், துணைவேந்தர்கள், மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் கலந்து பேசினோம். அதன் அடிப்படையில், முதலில் தேர்வுகள் ஆஃப் லைன் முறையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

ஆனால், தற்போதைய சூழலில், அதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும், இந்த முறையில் தேர்வு நடத்தினால் நாட்கள் தள்ளிப்போகும் என்ற காரணத்தாலும், செமஸ்டர் தேர்வுகளை மட்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகளில் ஒன்று முதல் ஐந்தாவது செமஸ்டர் வரையிலான தேர்வுகளை ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முடித்துவிட்டது, அப்போதைய சூழலைப் பொறுத்து, ஆன்லைன் வழியாகவோ அல்லது கல்லூரிகளை நேரடியாக நடத்துவது என்பது குறித்து தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு, நேரடியாகத்தான் நடத்தப்படும். ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து சரியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் ஒன்றிரண்டு நாள்கள் காலதாமதமானாலும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: student ends life: மாணவியின் திடுக்கிடும் மரண வாக்குமூலம்!