2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு மின்சார ரெயில் நிலையங்கள் நோக்கி படையெடுத்துள்ளன. இதனால் அனைத்து மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் மிகுதியாகவே காணப்பட்டனர். அதேபோல மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் காரணமாக நகரத்து சாலைகளில் ஷேர் ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் பாய்ந்து சென்றதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் காத்திருக்கும் பயணிகளை கூவிக்கூவி ஏற்றி செல்வதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போட்டிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.

‘நிறைய பஸ்கள் ஓடாது. வாங்க ஷேர் ஆட்டோவில் போலாம்’, என்று டிரைவர்கள் உரிமையோடு அழைப்பதையும் கேட்கமுடிந்தது.