அவெஞ்சர்ஸ் நடிகைக்கு ஹாலிவுட் காமெடி ஸ்டாருடன் திடீர் திருமணம்!

அவெஞ்சர்ஸ் புகழ் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் காலின் ஜோஸ்ட்டை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

சிறுவயது முதலே பல்வேறு நாடகங்களில் நடித்து பின்னர் 1994ஆம் ஆண்டு வெளியான ‘நார்த்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன். அதனைத் தொடர்ந்து மேனி & லோ, தி ஹார்ஸ் விஸ்பெரர், கோஸ்ட் வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து, மார்வெல் சினிமாட்டிக் உலகத்தில் ப்ளாக் விடோவாக வளம் வந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்த ஸ்கார்லெட், தற்போது உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் புகழ் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் காலின் ஜோஸ்ட்டை திருமணம் செய்து கொண்டதாக அமெரிக்க நிறுவனமான மீல்ஸ் ஆன் வீல்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்கார்லெட் நெருங்கிய வட்டாரமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த பதிவில், “எனக்கு வாழ்த்தும் தெரிவிக்கும் ரசிகர்கள் மீல்ஸ் ஆன் வீல்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கினால் நன்றாக இருக்கும். இந்த பணம் கரோனா காலத்தில் தவிக்கும் வயதானவர்களுக்கு உதவியாக இருக்கும்” என ஸ்கார்லெட் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் கடந்த 2019 மே மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். கிடைத்த தகவலின்படி, 35 வயதாகும் ஸ்கார்லெட் ஏற்கனவே இரண்டு நபர்களை திருமணம் செய்துள்ளார். அவருக்கு தற்போது, ரோஸ் என்ற மகளும் உள்ளார். ஆனால், எஸ்.என்.எல் நிறுவனத்தின் இணை தலைமை எழுத்தாளரும், வீக்கெண்ட் அப்டேட்டின் இணை தொகுப்பாளருமான 36 வயதான ஜோஸ்ட்டுக்கு இது முதல் திருமணமாகும்.