Vasantha Panchami 2022: வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவி வழிபாடு..!

Vasantha panchami 2022

Vasantha Panchami: வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும்.

ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம். வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளான இன்றைய தினம் புனித நதிகளில் நீராடி சரஸ்வதியை வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, நாட்களில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். இந்த இரண்டு பஞ்சமி தினங்களைத் தவிர்த்து, ‘வசந்த பஞ்சமி’ என்ற சிறப்புமிக்க தினமும் ஒன்று உள்ளது. ஆனால் அது தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை ஒட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வட நாட்டில் இந்த நிகழ்வை துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். வசந்த பஞ்சமி தினத்தைத்தான், வடநாட்டினர் சரஸ்வதியை வழிபடுவதற்கான விழாவாக கடைப்பிடிக்கிறாா்கள். இந்த ஆண்டு வசந்த பஞ்சமி பிப்ரவரி 5ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று பக்தியோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.

உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது. பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான்.

மேற்கு வங்க மாநிலத்தில் வசந்த பஞ்சமி நாளன்று குழந்தைகளை கல்வி நிலையத்தில் சேர்ப்பது, கல்வி கற்க துவங்குதல் வித்யாரம்பம் போன்றவைகளை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை கற்ற துவங்க உள்ள குழந்தைகள் முன்பாக பேனா, பென்சில், சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அதில் ஒன்றை எடுக்கச் சொல்வார்கள். குழந்தைகள் எடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அவர்களின் ஆர்வம் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்!

காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த வசந்த பஞ்சமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும்பப் படுவதாகக் கூறப்படுகிறது.

வசந்த பஞ்சமி நாளில் ஏராளமானோர் புனித நதிகளில் நீராடி சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம். வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது. வசந்த பஞ்சமி நாளான இன்றைய தினம் சரஸ்வதி தேவியை வழிபட்டு வாழ்வில் வளம் பெறலாம்.

இதையும் படிங்க: IPL 2022 ஏலம்: 10 அணிகளுக்கும் பிசிசிஐ கூறிய விதிமுறைகள்!