பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை மொத்தமாக வரவழைத்து கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

நேற்று மாலை மின்கசிவு காரணமாக பட்டாசு குடோன் தீ பிடித்து எரிய தொடங்கியது. குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் தீ மளமளவென அருகில் இருந்த பேக்கிரி, ரெடிமேட் கடைகளுக்கும் பரவியது.

அப்போது பேக்கிரியில் இருந்த 5-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த பகுதியில் எரிமலை வெடித்து சிதறுவதுபோல் தீ பிளம்பாக காட்சியளித்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த பயங்கர வெடிவிபத்தின்போது அருகில் இருந்த கடைகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் அந்த கடைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்துகுறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிலிண்டர்கள் வெடித்து தீ கொளுந்துவிட்டு எரிந்ததின் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை.

உடனே கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தின்போது மின்சாரம் தடைபட்டதாலும், சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்ததாலும் தீயை உடனடியாக அணைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்ததால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்கமுடியவில்லை. மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் கட்டிடங்கள் இடிந்ததையடுத்து அந்த பகுதியில் 2 கி.மீ. தூரத்தில் போக்குவரத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த தீ விபத்தில் சங்கராபுரம் மேட்டுதெருவை சேர்ந்த சையத்காலித் (வயது 22), ஷாஆலம் (24), ஷேக்பஷீர் (40), எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாச்சாமி உள்பட 6 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் சங்கராபுரம் எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த தமிழ்படைப்பாளர் சங்க தலைவர் அரங்கசெம்பியன் (65) என்பவரும் இறந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி, வானாபுரத்தை சேர்ந்த சஞ்சய் (18), கோவிந்தன் (29) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சரவணன், தாசில்தார் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதில் பட்டாசுகடை உரிமையாளரான செல்வகணபதி பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமத்தை இந்த ஆண்டு புதுப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.

அமைச்சர் வேலு, எம்.எல்.ஏ.க்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்