ரசாயன கலப்பு இல்லாத ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

அழகை பராமரிக்கவும், வசீகர முகப் பொலிவுடன் இருக்கவும் மெனக்கெடாத பெண்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. அங்க, அவயங்கள் அமைவதில் இயற்கை ஒரு போதும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றாலும், பரம்பரை மரபு சார்ந்த வகையில் ஒரு சிலருக்கு அங்கங்கள் அவலட்சணமாக அமைவதை என்னவென்று கூறுவது?அதே சமயம், அவளுக்கு என்ன… சாமுத்ரிகா லட்சணத்துடன் களையான முகம்… என கவர்ச்சியான பெண்கள் குறித்து ஆண்கள் ஏக்கத்துடனும் பெண்கள் பொறாமையுடனும் வர்ணிப்பதும் இயல்பிலேயே நீடிக்கிறது.

ரசாயன கலப்பு இல்லாத, ‘ரோஸ் வாட்டர்’ தயாரிக்கும் விதம் குறித்து விளக்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா: அழகு சிகிச்சைகளில் ரோஸ் வாட்டர் தவிர்க்க முடியாதது. முகத்தை வனப்பாக்கும் ‘பேஷியல்’ துவங்கி, ‘பேஸ்பேக்’ போடுவது வரை, ரோஸ் வாட்டர் பயன்பாடு அதிகம். கடைகளில் வாங்கும் ரோஸ் வாட்டரில், ரசாயன கலப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் எளிய முறையில், வீட்டிலேயே குறைந்த பொருட்களை பயன்படுத்தி, ரோஸ் வாட்டர் தயாரிக்கலாம்.அதற்கு, பன்னீர் ரோஜாக்கள், 20 எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் இதழ்களை உதிர்த்து, அகலமான ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

அதன் நடுவில் சற்று மேடாக இருக்கும் வகையில், கல் அல்லது பிளாஸ்டிக் பொருள் எதையாவது வைக்க வேண்டும்.அதைச் சுற்றி, உதிர்க்கப்பட்ட ரோஜா இதழ்களை துாவி, 1 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த பாத்திரத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கல் மீது, சிறிய கிண்ணம் போன்ற பாத்திரத்தை வைக்க வேண்டும். அந்த அகலமான பாத்திரத்திற்கு, மூடியை கவிழ்த்து வைக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு தட்டை கவிழ்த்து வைக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து, அந்த அகலமான பாத்திரத்தை, 10 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் பன்னீர் ரோஜா இதழ்கள் நன்கு வேக வேண்டும்.ரோஜா இதழ்களில் இருக்கும் ‘எசன்ஸ்’ ஆவியாகி, கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள மூடி மீது பட்டு, பாத்திரத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கல் மீது இருக்கும் கிண்ணத்தில் விழத் துவங்கும்.மூடி மீது, கொஞ்சம் ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டும். மிதமான தீயில், ரோஜா இதழ்கள் வெந்து, அதிலிருந்து வெளியேறும் ஆவி, ரோஸ் வாட்டராக, நடுவில் உள்ள கிண்ணத்தில் சேர்ந்தபடி இருக்கும்.மூடி மீது வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் உருகியதும், கீழே உள்ள பாத்திரத்தில் ரோஸ் வாட்டர் சேர்ந்திருக்கும்.

அதை அப்படியே எடுத்து, பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், 6 மாதங்கள் வரை கெடாத, சுத்தமான, ரசாயன கலப்பில்லாத ரோஸ் வாட்டர் கிடைத்து விடும்.அதன்பின், தண்ணீரில் வெந்துள்ள ரோஜா இதழ்களை வடிகட்டி, சூடு ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து, கிடைத்துள்ள ரோஸ் வாட்டரை ஒரு மாதத்திற்கு பயன்படுத்த லாம்.இப்படி, எளிய முறையில் அனைவரும் வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிக்க முடியும்!