அண்ணாத்த படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை திரும்பினார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஹைதராபாத்தில் நடந்து வந்த அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றபோதும் அவர் சென்னை திரும்பியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படும் தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தின் படப்பிடிப்பை தீவிரமாக இயக்கி வந்தார்.

இந்த நிலையில் திடீரென ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.