மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளது- ராகுல்

மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளது’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய, சீன படைகளுக்கிடையே கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதே போன்ற மோதல் சம்பவம் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல், ‘இந்திய அரசின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையால் நம் நாடு பலவீனமடைந்து உள்ளது. இதற்கு முன் இந்தியா இந்தளவுக்கு பலவீனமடைந்ததே இல்லை’ என, குற்றம்சாட்டி உள்ளார்.

ஆனால் ‘கல்வான் மோதல் குறித்து வெளியாகும் செய்திகள் பொய்யானவை; அடிப்படை ஆதாரமற்றவை’ என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.