பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைகிறார்

தேசிய, மாநில கட்சிகளுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிக்கான வியூகம் அமைத்துக் கொடுப்பதை தொழில்முறையாக செய்துவருபவர் பிரசாந்த் கிஷோர். ஐபேக்(IPAC) என்று பதிவு செய்யப்பட்ட நிறுனத்தின் அதனைச் செய்துவருகிறார்.

2014-ம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் பங்கும் முக்கியமானது.அதைப் போல, 2019-ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிப்பதற்கும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடிப்பதற்கும் அவருடைய பங்கு முக்கியமானதாக இருந்தது. அதேபோ, தமிழ்நாட்டில் இந்தமுறை தி.மு.கவிற்கு தேர்தல் வியூகப் பணியாற்றினார்.

அ.தி.மு.க உள்ளிட்ட தி.மு.கவின் எதிர்கட்சிகள் பிரசாந்த் கிஷோரை குறிப்பிட்டு திட்டும் அளவுக்கு அவருடைய பங்களிப்பு இருந்தது.அதேபோல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தார். பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கலாம் என்று செய்திகள் வந்தநிலையில், பா.ஜ.க 100 தொகுதிகளைத் தாண்டாது. அப்படி தாண்டில் நான் இந்த தொழிலை விட்டு விலகுகிறேன் என்று தெரிவித்தார். அதைத் தேர்தலில் சாதித்தும் காட்டினார். அப்படி, அவருடயை தேர்தல் வியூக வரலாறு மிகப்பெரிய வெற்றியின் பாதைகளால் ஆனது.

அவருடைய ஆரம்ப காலக் கட்டத்தில் மோடிக்கு நெருங்கியவராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், தற்போது அவரைத் தீவிரமாக எதிர்த்துவருகிறார். பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்திருந்தார். பின்னர், அவருடனான ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு கட்சியிலிருந்து வெளியேறினார்.இந்தநிலையில், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முக்கிய பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில வாரங்களில் மூன்று முறை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக இந்தச் சந்திப்பு என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதைவிட நீண்ட கால செயல்திட்டம் தொடர்பாக இந்தச் சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்று தகவல்கள் வெளிவருகின்றன.