கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள், வரும் 15ம் தேதி முதல், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என, மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசையாவது போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என, அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இதன் பின்னர், முதலமைச்சர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பஞ்சாப் மாநிலத்தில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், எதிர் வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. உணவகங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசையாவது போட்டிருக்க வேண்டும்
உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை இந்த மாதத்திற்குள் திறப்பதற்கு உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.தற்போது நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு, இதை, 50 ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


