பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்- கரூர் மாணவி

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு, சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று? போலீசார் இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்….என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்…இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா…சித்தப்பா…மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி…என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.