பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு

நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததே பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனக்கூறிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரத்திற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையிலும், பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ. 5.26 காசுகள் குறைத்தது. இதனை விமர்சிக்கும் விதமாக காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 30 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கு காரணம். இவ்வளவு நாள் மத்திய அரசின் பேராசையினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது. அதிக வரி விதிப்பினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது என்பது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பதிவில், ‛மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியதை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்,’ எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டாசு வெடித்ததில் இரண்டு பேர் உடல் சிதறி உயிரிழப்பு