லண்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கரோனா உறுதி

லண்டனிலிருந்து டெல்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என, மாநில சுகாதார முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனை தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து பாா்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்கிலாந்தில் பரவிவரும் கரோனாவால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

லண்டனிலிருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து விமானங்களில் வருவோருக்கு RT – PCR சோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளி தான் கரோனாவுக்கு தீர்வு. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமை கட்டாயம்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவின் பிற நகரங்களில் இருந்து விமானத்தில் வருவோருக்கும் சோதனை நடத்தப்படும். கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.