ப. சிதம்பரம் மோடி அரசிற்கு எதிராக டிவிட்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் மோடி அரசிற்கு எதிராக டுவிட்டர் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஐயா மோடி அவர்களே, எங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டு போஸ்டர் ஒட்டியதாக குற்றம் சாட்டி 24 பேரை டில்லி போலீஸ் கைது செய்தார்கள்
ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே!
இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். விளைவு: பெருங் குழப்பம்.
பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு I.C.E. என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும், அது அரசிடம் இல்லை. முதல் அலையின்போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன.


மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது
இரண்டாவது அலை தொடங்கியபோது இதுவும் முதல் அலைபோன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்துவிடும் என்று அரசு கருதியது. ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை.
எதிர்கால தேவைகளுக்கு- ஆக்ஸிஜன், வென்டிலேடர், தடுப்பூசிகள், வாகனங்கள்- திட்டமிடவில்லை. தேவையான செவிலிகளை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை.
தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2-ம் நாள் 42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 லட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம்தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது.
முதல் அலை ஓய்ந்தபோது பரிசோதனைகள் தொய்வடைந்தன. பரிசோதனை மாதிரிகள் குறையும்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்தானே? வெயில் அடித்தபோது கூறையை செப்பனி செய்யவில்லையென்றால், அட மழை பெய்யும் போது கூறை ஒழுகும் தானே?
கொரோனா முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டமைப்புகள் அக்டோபர் 2020-க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. இரண்டாவது அலை தொடங்கியபோது எஞ்சியிருந்த கட்டமைப்புகள் போதுமானவை அல்ல என்பது அம்பலமாகியது